Thursday, October 8, 2009

Aarumugam


தினமலர் விமர்சனம்

தன் ஆஸ்தான இசையமைப்பாளர் தேவா பாணியில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் களம் இறங்கி விட்டார் போலும்! தேவா தன் முந்தைய பாடல்களை தானே ஸ்வாஹா செய்து திரும்ப திரும்ப தருவார்! சுரேஷ் கிருஷ்ணா, தன் முந்தைய படங்களுள் ஒன்றான அண்ணாமலையை ஆறுமுகமாக்கி இருக்கிறார். அவ்வளவுதான்!

ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தும் ஹீரோ பரத்தும், கோடீஸ்வரி ரம்யா கிருஷ்ணனின் ஒரே தம்பி சத்யாவும் உயிர் நண்பர்கள். ஸ்டேட்டஸ் பார்க்காமல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வளரும் இந்த நட்பு ரம்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதன் விளைவு... அவர்களை திட்டம் போட்டு பிரிக்கிறார். அது கண்டு பொங்கி எழும் பரத்தை கட்டம் கட்டி, தனக்கும் தன் பணத்திமிருக்கும் சாதகமான சட்ட திட்டங்களை பயன்படுத்தி பரத்தின் பாசமான குடும்பத்தாரையும், அவரது அம்மாவின் சமாதியையும் சின்னா பின்னாமாக்குகிறார். விடுவாரா பரத்? ஒரே பாட்டில் ரம்யா கிருஷ்ணனின் ரூட்டிலேயே போய் அம்மணி ரம்யாவையும், தாண்டிய கோடீஸ்வரராகி, செல்வாக்கும், சொல்வாக்கும் உள்ளவராக உயர்ந்து வில்லி ரம்யாவை வீதியில் தள்ளுகிறார். அட.., அப்புறம்? அப்புறமென்ன? வீதிக்கு வந்ததும் பரத்தின் அம்மா சீதாவின் சமாதிக்கு போய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் ரம்யா, மனம் மாறுகிறார். வில்லியே மனம் மாறியதும் ஹீரோ சும்மா இருப்பாரா? நட்பிற்காகவும், தன் நண்பனின் அக்கா ஆளே மாறியதற்காகவும் அவர்கள் இழந்த சொத்துக்களை பரத்தே ஏலத்தில் எடுத்து அவர்களுக்கு ‌திரும்ப தருவதுதான் அண்ணாமலை... சாரி..., ஆறுமுகம்! இத‌னிடையே ரஜினிக்கு குஷ்புவுடனான... இல்லை, இல்லை... பரத்திற்கு ப்ரியாமணி உடனான காதல், கருணாஸின் காமெடி உள்ளிட்டவைகளை கலந்து கட்டி அழகாக (?) பரத் ரசிகர்களுக்கு படம் காட்டியிருக்கிறார்கள்.

அண்ணாமலையில் ரஜினியாவது பிற்பாதியில் ஓல்டு கெட்-அப்பில் காட்சிக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பார். ஆனால் இதில் ஓவர் நைட்டில் அல்லது ஒரு மாத கால டே-நைட்டிலேயே ரம்யாவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வரும் பரத், ப்ளாஷ்பேக் தாய் (சீதா), பாசத்திலும் சரி, கரண்ட் சீன்களின் தங்கை (சரண்யா மோகன்) பாசத்திலும் சரி., அப்படியே ரஜினியையும் அவரது மேனரிசங்களையும் பின்பற்றி இருந்தாலும்., குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக இளைஞராகவே பரிதாபமாக காட்சியளிக்கிறார். பாவம்!

சரி.. நாயகர்தான் மேற்படி, இப்படி என்றால்... நாயகி ப்ரியாமணியை (பரத்திற்கு ஜோடியாக ப்ரியாமணியை சிபாரிசு செய்த புண்ணியவான் யாரோ தெரியவில்லை) பரத்துடன் பார்க்கும் போதெல்லாம் அக்கா பாசம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இதனாலேயே ப்ரியாமணி அத்தன திறந்து காட்டியும் பிடித்தம் ஏற்படாமல் போவது வருத்தம்.

அண்ணாமலை ரஜினியை பரத் பாலோ செய்திருக்கிறார் என்றால், படையப்பா நீலாம்பரியை வில்லி ரம்யா கிருஷ்ணன் செய்திருக்கிறார். ஆனாலும் நாயகி ப்ரியாமணி உள்ளிட்டவர்களை எல்லாம் ஓடங்கட்டி விடுகிறது ரம்யாவின் நடை, உடை, பாவனை.. இத்யாதி..., இத்யாகி..., எல்லாம்! அம்மணியை வில்லி என்பதை விட ஆன்ட்டி ஹீரோயின் எனலாம். அனைத்து தரப்பு ஆடியன்ஸூக்கும் பிடித்த ஆன்ட்டி எனவும் கொள்ளலாம். பரத், ப்ரியாமணி, கருணாஸ், சத்யா (ரம்யாவின் தம்பி), சரண்யா மோகன், இளவரசு, சீதா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் ஆறுமுகம் படத்தின் ஒரே ஆறுதல் ரம்யா கிருஷ்ணன் மட்டும்தான் என்றால் மிகையல்ல..!

ரம்யா மாதிரியே தளபதி தினேஷின் சண்‌டைகாட்சிகள், எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் ஆறுமுகத்தின் பலம். தேவாவின் பாடல்கள் சற்று பெரிய இடைவெளிக்குப் பின் மீண்டும் மெலடி ஆறுதல் என்றாலும் பின்னணி இசையில் அண்ணாமலை.. அண்ணாமலை.. என்பது போல ஆறுமுகம்... ஆறுமுகம்... என பாடல் ஒலிக்காத குறையாக அதே அண்ணாமலை எபெக்ட் இருப்பதும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாமலையை மீண்டும் சாதாரண நடிகர் பரத் நடிக்க பார்க்கும்போது ஏற்படும் சலிப்பும் பெரும் பலவீனம்! பில்லாவை அஜித் நடிக்க அல்ட்ரா மார்டனாக தந்தது போன்று அண்ணாமலையை பரத் நடிக்க அல்ட்ரா மார்டனாக இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி தந்திருந்தாலாவது தப்பித்திருக்கலாம்.

மொத்தத்தில் ஆறுமுகம் பரத்திற்கு, அவரது மனதிற்கும் வேண்டுமானால் ஏறுமுகமாக இருக்கலாம். ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்ற(முகம்)மாகும்.
ஆறுமுகம் : ஏறுமுகமுமல்ல.. இறங்குமுகமுமல்ல...!

0 comments:

Post a Comment

Recent Comments

Powered by Blogger Widgets