நானும் நடிக்கத் தெரியாமல்தான் இருந்தேன் என்றும், பாலச்சந்தர் போன்ற இயக்குனர்கள் தனக்கு நடிக்க கற்றுக்கொடுத்து மெருகேற்றி யதாகவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சமூகத்தில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே திரைப்படங்களுக்கான கதைகள் உருவாவதாகவும், சமூகத்தில் இல்லாத வன்முறையை திரைப்படங்களில் காண்பிக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்திந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சென்னையில் வரும் 18 மற்றும் 19 ஆகியதேதிகளில் ஊடகம், கேளிக்கை தொழில் வர்த்தக கருத்தரங்கை நடத்துகிறது.இந்த கருத்தரங்கின் தலைவராக நடிகர் கமல்ஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த கருத்தரங்கு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கமல்ஹாசன், கருத்தரங்கின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து விவரித்தார்.திரைப்படத்தொழில் ஒருங்கிணைக் கப்படவில்லை என்றும், இந்த நோக்கில் செய்யப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கருத்தங்கில் நிபுணர்களால் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது சமீபத்தில் தேர்வறையில் செல்போன் மூலம் காப்பி அடித்த மாணவர்கள் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தைப் பார்த்து இவ்வாறு செய்ததாக கூறியதைக் குறிப்பிட்டு நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், திரைப்படங்கள் குற்றங்களை தூண்டுவதாக சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும், சமூகத்தில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தே கதைகள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்.
திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறையை விட சமூகத்தில் அதிக வன்முறை இருப்பதாக அவர் தெரிவித்தார்.மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தான் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் வருடத்திற்கு மூன்று, நான்கு படங்களில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இன்றுள்ள பல நடிகர்களுக்கு நடிக்கவே தெரியவில்லையே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல், தானே நடிக்கத் தெரியாமல்தான் இருந்ததாகவும், பாலச்சந்தர் போன்ற இயக்குனர்கள் தன்னை மெருகேற்றியதாகவும் தெரிவித்தார்.தன்னைப்போன்ற கலைஞர்கள் இந்த பணியை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
உலகமயமாதல் பாதிப்பு காரணமாக இந்திய திரைப்படங்களின் பிராந்திய தன்மை பாதிக்கப்படாது என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத்தை திரைப்படத்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
18ந் தேதி முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கவுள்ளார். மத்திய அமைச்சர் அம்பிகா சோனி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.